search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடல் பாடல் நிகழ்ச்சி"

    • ஆண்-பெண் இணைந்து ஆபாசமாக மேடையில் நடனமாடுவது போன்ற புகைப்படங்கள் நீதிபதிகளிடம் கொடுக்கப்பட்டது.
    • கோவில்களில் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடனம் நடத்த அனுமதிக்க முடியாது.

    மதுரை:

    திருச்செந்தூர் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தசரா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மைசூர் தசரா விழாற்கு அடுத்து குலசேகரன்பட்டினத்தில் தசரா விழா கொண்டாடப்படும்.

    இந்த தசரா விழாவில் பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு சிலர் மும்பை பார் நடன மங்கையர், துணை சினிமா நடிகைகள், சின்னத்திரை நாடக நடிகர்களை அதிக பணம் கொடுத்து அழைத்து வந்து பக்தர்களிடையே சினிமா குத்து பாடல்களுக்கு ஆடும் முறை நடைமுறையில் உள்ளது.

    இந்த நடிகர்-நடிகைகள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாச உடையணிந்து ஆடுவது மாற்று மதத்தினர் மத்தியில் இந்துக்களின் விரத முறை மீதான நன்மதிப்பை குறைக்கிறது. 2017-ல் மாண்புமிகு உயர்நீதிமன்றம் ஆபாசமான அங்க அசைவுகளுடன், அரைகுறை ஆடைகளுடன் ஆடுவதை தடை செய்து இருந்தும் நீதிமன்ற உத்தரவு உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை.

    எனவே ஆன்மீக நிகழ்ச்சியான குலசை தசரா சார்ந்த நிகழ்ச்சிகளில் பக்தி பாடல்கள் இல்லாத பாடல்கள் மற்றும் சினிமா குத்து பாடல்கள் பாடி மற்றும் ஒலிப்பரப்பி ஆட தடை விதிக்க வேண்டும்

    இதனை மீறும் ஒருங்கிணைப்பாளர்கள், ஒலி மற்றும் ஒளி அமைப்பாளர்கள், தசரா குழுக்கள் மற்றும் நடிகர்-நடிகையர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனு தாரர் தரப்பில் கோவில் நிகழ்ச்சியில் ஆண்-பெண் இணைந்து ஆபாசமாக மேடையில் நடனமாடுவது போன்ற புகைப்படங்கள் நீதிபதிகளிடம் கொடுக்கப்பட்டது.

    அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் கோவில் திருவிழாவில் எப்படி இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்த காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் அனுமதிக்கின்றனர் என கேள்வி எழுப்பினர். மேலும் தசரா நிகழ்ச்சியில் இது போன்ற ஆடல் பாடல் நடத்த தடை விதித்து உத்தரவிட்டனர்.

    இந்த வருடம் நடைபெறும் தசரா நிகழ்ச்சி அனைத்தையும் மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

    மேலும் கோவில்களில் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடனம் நடத்த அனுமதிக்க முடியாது. எனவே இது குறித்து உரிய வழிகாட்டுதல்களுடன் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

    ×